Powered By Blogger

Thursday, September 22, 2011

வயர்லெஸ் தொழில்நுட்பங்கள்
(Wireless Technologies)
[மனோரமா 2006 தமிழ் இயர்புக்கில் வெளிவந்த ‘தகவல் தொடர்பின் புதிய பரிமாணங்கள்’ என்ற என் கட்டுரையின் இரண்டாம் பகுதி]
இரண்டுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை ஒன்றாகப் பிணைத்து அவற்றுக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்ளும் கட்டமைப்பைப் பிணையம் (Network) என்கிறோம். பிணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகள் அமைந்துள்ள தொலைவின் அடிப்படையில் பிணையங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
(1) தனிப்பரப்புப் பிணையம் (Personal Area Network – PAN)
(2) குறும்பரப்புப் பிணையம் (Local Area Network – LAN)
(3) மாநகர்ப் பரப்புப் பிணையம் (Metro Area Network – MAN)
(4) விரிபரப்புப் பிணையம் (Wide Area Network – WAN)
இவ்வளவு காலங்களாகப் பிணையங்களில் கணிப்பொறிகள் கம்பிகள் (Wires), வடங்கள் (Cables) மூலமாக, பிணைவி (Hub), தொடர்பி (Switch), திசைவி (Router) போன்ற சாதனங்களில் இணைக்கப்பட்டுத் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டன. தொலைபேசிப் பிணையத்தில் கம்பி இணைப்புகள் இல்லாமல் தொடர்பு கொள்ளும் மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் போலவே கணிப்பொறிப் பிணையங்களிலும் கம்பி/வடங்கள் இல்லாத வயர்லெஸ் நெட்ஒர்க் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகின்றன. நான்குவகை பிணையங்களுக்குமென புதிய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
(1) வயர்லெஸ்-பேன் (Wireless PAN): இர்டா (IrDA), புளூடூத் (Bluetooth). வயர்லெஸ் யுஎஸ்பி (WUSB). அல்ட்ரா வைடுபேண்டு (UWB). ஜிக்பி (Zigbee)
(2) வயர்லெஸ்-லேன் (Wireless LAN): வைஃபி (Wi-Fi)
(3) வயர்லெஸ்-மேன் (Wireless MAN): வைமாக்ஸ் (WiMAX)
(4) வயர்லெஸ்-வேன் (Wireless WAN): வைமாக்ஸின் மேம்பட்ட வடிவங்கள்
வீட்டில் எந்த மூலையில் இருந்துகொண்டும் செல்பேசி, பீடிஏ, கையகக் கணிப்பொறி (Palmtop). மடிக்கணிப்பொறி (Laptop), போன்ற கருவிகளின் மூலம் வீட்டுக் கணிப்பொறியைத் தொடர்பு கொள்ளவும் அதன்மூலம் இணையத்தை அணுகவும், அலுவலகத்தில் எங்கிருந்தும், மடிக்கணிப்பொறி மூலமாக அலுவலக நெட்ஒர்க்கில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும், ஓட்டலில், ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில் தங்கிச் செல்லும்போது இணையத்தையும் அதன் வழியே தம் நிறுவன நெட்ஒர்க்குகளோடு தொடர்பு கொள்ளவும் வயர்லெஸ் நெட்ஒர்க் தொழில்நுட்பங்கள் வாய்ப்பளித்துள்ளன.
 இர்டா (IrDA)
அகச்சிவப்புக் கதிர்கள் (Infra Red Rays) மூலமாக தகவல் பரிமாறும் தொழில்நுட்பம் இது. மிகக் குறுகிய தொலைவிற்கே தகவல் பரிமாற்றம் சாத்தியம். இர்டா அலைபரப்பிகள் ஒரு கூம்பு வடிவில் அகச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தும். கூம்பின் மையக்கோட்டிலிருந்து 15 முதல் 30 டிகிரி வரை அலைபரப்பு இருக்கும். கூம்பின் மையப்பகுதியில் 5 செ.மீ முதல் 60 செ.மீ வரையிலான தொலைவுக்குத் தகவல் பரிமாற்றம் சாத்தியம். இடையில் மறைப்பு அல்லது தடுப்புகள் எதுவும் இருக்கக்கூடாது. ஒருதிசைவழிப் போக்குவரத்துத்தான் (Half-Duplex) நடைபெற முடியும். அனுப்புமுனை கதிர்களைச் செலுத்துகையில், பெறும்முனை தன்னுடைய ஒளியை அணைத்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே இருதிசைப்போக்குவரத்து சாத்தியமில்லை. எனினும் மிக வேகமாகக் கதிர்களை அணைத்துச் செலுத்துவதன் மூலம் இருதிசைப் போக்குவரத்து போன்ற பாவனையை ஏற்படுத்த முடியும். இதன் தகவல் பரிமாற்ற வேகம்:
(1) நேர்கதிர் : 9.6 Kbps முதல் 115.2 Kbps வரை
(2) நடுத்தரம் : 0.576 Kbps முதல் 1.152 Kbps வரை
(3) வேகம் : 4 Kbps வரை
(4) மிகுவேகம் : 16 Kbps வரை
(5) அதிமிகுவேகம் : 100 Kbps வரை
அதிமிகுவேக சாதனங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆய்வில் உள்ளன. இத்தொழில்நுட்பம் ஐஆர்சிம்பிள் (IrSimple) என்றழைக்கப்படுகிறது. இதுவரையில் 16 Mbps வரையிலான தகவல் பரிமாற்றம் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
இர்டாவின் பயன்பாடுகள்
கணிப்பொறியில் விசைப்பலகை, சுட்டி அச்சுப்பொறி ஆகியவற்றை வயரிணைப்பின்றிப் பயன்படுத்த முடியும். பெரும்பாலான சேய்மைக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் (Remote Control Devices) இர்டாவில் செயல்படுகின்றன. செல்பேசி, பீடிஏ, லேப்டாப் ஆகியவற்றை மேசை’ கணிப்பொறியுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள இர்டா பயன்படுகிறது. 100 Mbps வேகம் கொண்ட ஐஆர்சிம்பிள் நடைமுறைக்கு வரும்போது டிஜிட்டல் கேமராக்களையும், செல்பேசிகளையும் ரிமோட் கன்ட்ரோல் கருவிகளைப்போல் பயன்படுத்த முடியும். தட்டைத் திரை டீவி மற்றும் பிற திரைக்காட்சிச் சாதனங்களுக்கு மிகுதெளிவு ஒளிப்படங்களை (Photos) உடனுக்குடன் அனுப்பி வைக்க முடியும்.
 புளூடூத் (Bluetooth)
இர்டாவைவிடப் புளூடூத் பரவலாகப் பயன்படுத்தப்படும் வயர்லெஸ்-பேன் (WPAN) தொழில்நுட்பம் ஆகும். இதன் வரையறுப்புகள் ஐஇஇஇ 802.15.1 இல் வெளியிடப்பட்டுள்ளன. வரையறுப்புகளை முதலில் உருவாக்கியது எரிக்ஸன் நிறுவனம். ஹபுளூடூத் 1.2 வரையறுப்புகள் 2004-இல் வெளியிடப்பட்டன. 2.45 GHz அலைவரிசையைப் பயன்படுத்திக் கொள்கிறது. 1 Mbps வரை தகவல் பரிமாற்றம் சாத்தியம். எனினும் நடைமுறையில் 723 Kbps வரையே எட்டியுள்ளது. 30 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.
அண்மையில் புளூடூத் 2.0 அறிவிக்கப்பட்டது. அதே 2.45 GHz அலைவரிசையில் செயல்படும். மேம்பட்ட தகவல் வீதம் (Enhanced Data Rate) என்னும் நுட்பம் புளூடூத் 2.0-ன் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிகரிக்கும். 3 Mbps வரை வேகம் இருக்க முடியும். எனினும் நடைமுறையில் 2.1 Mbps நிச்சயமாகப் பெறமுடியும். 100 மீட்டர் வரை செயல்படும். புளூடூத் 2.0 + இடிஆர் தொழில்நுட்பத்துடன் முதல் சாதனமாக ஆப்பிள் பவர்புக் மடிக்கணிப்பொறி ஜனவரி 2005-இல் வெளியிடப்பட்டது.
புளூடூத் தொழில்நுட்பத்தின் முக்கியமான சிறப்புக்கூறு, புளூடூத் சாதனங்கள் மிகக்குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். இவற்றின் பேட்டரிகள் நீண்ட நாட்களுக்கு வரும்.
புளூடூத் பயன்பாடுகள்
• வரம்புக்குட்பட்ட இடத்தில் குறைந்த அலைக்கற்றை தேவைப்படக்கூடிய மேசைக் கணிப்பொறிகள் அல்லது மேசைக் கணிப்பொறி மற்றும் மடிக் கணிப்பொறிகளுக்கு இடையேயான வயர்லெஸ் நெட்ஒர்க்குகள்.
• வயர்லெஸ் முறையில் கணிப்பொறியுடன் விசைப்பலகை, சுட்டி, அச்சுப்பொறிகளை இணைத்தல்.
• படங்கள், எம்பீ3 ஃபைல்களை செல்பேசி, பீடிஏ ஆகியவற்றுக்கும் கணிப்பொறிகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளுதல்.
• எம்பீ3 இயக்கிகள், டிஜிட்டல் கேமராக்களிலிருந்து கணிப்பொறிக்குப் பாடல்கள், படங்களைப் பரிமாறுதல்.
• வாகனங்களில் செல்வோர்க்கு செல்பேசிக்கான தலைக்கருவிகள்
• மருத்துவப் பயன்பாடுகளுக்கான கருவிகள்
• வீட்டுப் பாதுகாப்பு, தொழிலகத் தானியங்கிப் பணிகளுக்கான உணரிகள் (Sensors)
ஒரு புளூடூத் சாதனத்தை தலைவராகவும் (Master) ஏழு புளூடூத் சாதனங்களைத் தொண்டர்களாகவும் (Slaves) கொண்டு நெட்வொர்க் அமைக்க முடியும். தலைவர் ஒரு நேரத்தில் ஒரு தொண்டருடன் மட்டுமே பேச முடியும். இந்த எட்டுச் சாதனங்களையும் கொண்ட நெட்ஒர்க்கை 'பிக்கோநெட்' (Piconet) என்றழைப்பர். ஒன்றுக்கு மேற்பட்ட பிக்கோநெட்டுகளை ஒன்றாக இணைத்து ஸ்கேட்டர்நெட்டுகளை அமைக்க முடியும். சில சாதனங்கள் இணைவிகள் (Bridges) போலச் செயல்படும். ஒரு பிக்கோநெட்டில் தலைவராக உள்ள சாதனம் இன்னொரு பிக்கோநெட்டில் தொண்டராக இருக்க முடியும். ஒரு பிக்கோநெட்டில் 255 சாதனங்கள் வரை இணைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
 வயர்லெஸ்-யுஎஸ்பி (WUSB)
மிகப்பெரிய ஃபைல் பரிமாற்றம் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு புளூடூத் ஏற்றது அல்ல. எடுத்துக்காட்டாக, வீடியோ கேமராவிலிருந்து டீவிக்குத் தகவல் பரிமாற்றம் செய்வது, பல்வேறு கணிப்பொறிகளிலிருந்து ஒரு புறநிலை ஹார்டுடிஸ்க்கில் டேட்டாவை வயர்லெஸ் முறையில் பேக்கப் எடுப்பது போன்ற பணிகளுக்கு புளூடூத் பயன்படாது. இதுபோன்ற தேவைகளுக்கு வயர்வெஸ் யுஎஸ்பி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். Universal Serial Bus என்பதன் சுருக்கமே யுஎஸ்பி ஆகும். பிரின்டர், மோடம், மெமரி கார்டுகள், டிஜிட்டல் கேமரா போன்ற புறச் சாதனங்களை யுஎஸ்பி கேபிள்கள் மூலம் கணிப்பொறியில் இணைக்கலாம். இதே தொழில்நுட்பத்தை வயர் இல்லாமல் செயல்படுத்த முடியும். அதுவே வயர்லெஸ்-யுஎஸ்பி. இது, யுஎஸ்பி 2.0 வரையறுப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
வயர்லெஸ்-யுஎஸ்பி, டேட்டா பரிமாற்றத்துக்கு அல்ட்ரா-வைடுபேண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அல்ட்ரா-வைடுபேண்டு மிகப்பரந்த ரேடியோ அலைவரிசையில் செயல்படுவதாகும். (இதைப்பற்றி அடுத்துப் படிக்க உள்ளோம்). 3.1 GHZ முதல் 10 GHZ வரை ஏறத்தாழ 7 GHZ அலைக்கற்றையைப் பயன்படுத்திக் கொள்கிறது. 10 மீட்டர் தொலைவில் 110 Mbps வேகத்திலும், 3 மீட்டர் தொலைவில் 480 Mbps வேகத்திலும் தகவல் பரிமாற்றம் சாத்தியம். இந்த வேகம், வயர்லெஸ் லேனில் உள்ள தகவல் பரிமாற்ற வேகத்தைவிட அதிகமாகும்.
ஒரு ஹேஹாஸ்டும் 127 சாதனங்களும் இணைந்து ஒரு நெட்ஒர்க் கிளஸ்டரை ஏற்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கிளஸ்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். பிரின்டர், ஸ்கேனர், புறநிலை ஹார்டுடிஸ்க், டிஜிட்டல் கேமரா, வீடியோ புரொஜக்டர் போன்ற சாதனங்களை வயர் இல்லாமலேயே கணிப்பொறியுடன் இணைத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கணிப்பொறி, பிரின்டர், டிஜிட்டல் கேமரா அமைந்த ஒரு கிளஸ்டரில் டிஜிட்டல் கேமராவிலிருந்து கணிப்பொறி வழியாக பிரின்டரில் படங்களை அச்சிட முடியும்-வயரிணைப்பு எதுவும் இல்லாமலேயே.! எம்பீ3 பிளேயர், பாம்டாப், லேப்டாப்பிலிருந்து டெஸ்க்டாப் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்ள முடியும் - வயரிணைப்பு இன்றியே!
 அல்ட்ரா-வைடுபேண்டு (UWB)
இது ஓர் அதிநுட்பமான ரேடியோ தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகும். மிகக்குறுகிய நேர அலைத்துடிப்புகள் பரப்பப்படும். அவை உருவாக்கும் அலைக்கற்றை மிகவும் விரிவானதாக இருக்கும். பிற ரேடியோ அலைவரிசைத் தகவல் தொடர்புகளிலிருந்து மாறுபட்ட வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகும்.. ஆர்எஃப் எனப்படும் ரேடியோ அலைவரிசை இல்லாமலே வயர்லெஸ் தொடர்பை இது வழங்குகிறது. ஒரு நானோ வினாடி நேரத்துக்கும் குறைவான, குறைதிறன்கொண்ட உயர்அதிர்வலைத் துடிப்புகளைப் பயன்படுத்துகிறது. குறைந்த மின்சக்தி போதும் என்பதே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பண்புக் கூறாகும். 5.925-7.25 GHz மற்றும் 16.2-17.8 GHz அலைவரிசையில் செயல்படுகிறது. இது அதிவேக வயர்லெஸ் நெட்ஒர்க்குகளைச் சாத்தியமாக்கியுள்ளது. 10 மீட்டருக்கும் குறைவான தொலைவுக்குள் 800 Mbps வரை வேகம் இருக்கும். தூரம் அதிகரிக்கும்போது வேகம் வெகுவாகக் குறையும். எனினும் லேன் நெட்ஒர்க்கில் வயர் இணைப்புகளை வயரிலா இணைப்பாக்கிச் செயல்பட அல்ட்ரா-வைடுபேண்டு பெரிதும் பயன்படும்.
முறுக்கிய இணைச் செப்புக் கம்பிகள் (twisted pair copper wire) மற்றும் இணையச்சு வட (co-axial cable) இணைப்புகளில் அல்ட்ரா-வைடுபேண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 Gbps வேகத்தைப் பெறமுடியும். அல்ட்ரா-வைடுபேண்டு வளர்ந்துவரும் தொழில்நுட்பமாகும். இதனைப் பின்புலமாகக் கொண்டு பல்வேறு வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று நாம் பார்த்த வயர்லெஸ்-யுஎஸ்பி ஆகும்.
 ஜிக்பி (ZigBee)
மிக அண்மைக் காலத் தொழில்நுட்பம் இது. இதன் வரையறுப்புகள் 14 டிசம்பர் 2004-இல் அங்கீகரிக்கப்பட்டன. ஐஇஇஇ 802.15.4 தரப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜிக்பி 1.0 வரையறுப்புகள் 13 ஜுன் 2005-இல் பொதுப் பயன்பாட்டுக்கென அறிவிக்கப்பட்டன. ஜிக்பி, வயர்லெஸ் பெர்சனல் ஏரியா நெட்ஒர்க்குக்கான (WPAN) எளிய, செலவு குறைந்த தொழில்நுட்பம் ஆகும். புளூடூத்தோடு ஒப்பிடுகையில் ஜிக்பி குறைந்த நினைவகத்தில் செயல்படும். ஜிக்பியின் உட்பொதி மென்பொருள் அளவு புளூடூத் மென்பொருளைவிடச் சிறியது. புளூடூத் மென்பொருள் 200 KB அளவுடையதாக இருக்கிறதெனில், அதிகச் செயல்திறன் கொண்ட ஜிக்பி கருவிக்கு 20 KB மென்பொருள் போதும்.
ஜிக்பி, 2.4 GHZ. 915 GHZ. 858 GHZ அலைக்கற்றைகளில் செயல்படும். டேட்டா பரிமாற்ற வேகம் 915 MHz கற்றையில் 40 Kbps ஆகவும், 868 MHz கற்றையில் 20 Kbps ஆகவும் 2.4 GHz கற்றையில் 250 Kbps ஆகவும் இருக்கும். 10 முதல் 70 மீட்டர்கள் வரை செயல்படும்.
இர்டா, புளூடூத், வயர்லெஸ்-யுஎஸ்பி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இயலாத பயன்பாடுகளுக்கு உகந்த தொழில்நுட்பம் என்பதே ஜிக்பியின் சிறப்புக் கூறு. சேய்மைக் கண்காணிப்பு (Remote Monitoring) பயன்பாடுகளுக்கு ஜிக்பி மிகவும் ஏற்றது. வீட்டுப் பாதுகாப்பு, கட்டடப் பாதுகாப்பு, தொழிலக தானியங்கு பணிகளுக்கான உணரி (Sensor) சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் ஜிக்பி பயன்படுகிறது.
ஜிக்பி சாதனங்களை கட்டடங்களில் ஏர்கண்டிஷன், கூலர், ஹீட்டர், தீ எச்சரிக்கை ஆகியவற்றுக்கென உணரி சாதனங்களாகப் பயன்படுத்த முடியும். அதிலெல்லாம் அதிகமான அளவு டேட்டா பரிமாற்றம் தேவை இல்லை. மிகக்குறைந்த மின்சக்தியில் இயங்கக்கூடிய சாதனங்கள் இருக்க வேண்டும். சிறிய பேட்டரிகள் பல்லாண்டுகள் வரை மின்சக்தியை வழங்கக்கூடியதாய் இருக்க வேண்டும். மிகச்சரியாக இந்தத் தேவையை ஜிக்பி நிறைவு செய்கிறது. மேலும் ஜிக்பி நெட்ஒர்க்கில் 65000க்கும் அதிகமான சாதனங்களை இணைக்க முடியும். மிகப்பெரிய கட்டட அமைப்புகளையும், மிகப்பெரிய தொழிற்சாலைகளையும் தீ, வெடிகுண்டு போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான அரண்களை ஜிக்பி நெட்ஒர்க்கினால் அமைத்துக் கொள்ள முடியும்.
 வைஃபி (Wi-Fi)
வயர்லெஸ் லேனுக்குரிய தொழில்நுட்பங்கள் அனைத்திற்குமான பொதுவான பெயர் வைஃபி (Wi-Fi). வைஃபை எனக் கூறுவாரும் உளர். Wireless Fidelity என்கிற தொடரே சுருக்கமாக Wi-Fi என அழைக்கப்படுகிறது. ஐஇஇஇ (IEEE) அமைப்பு வரையறுத்துள்ள வயர்லெஸ் லேனுக்கான 802.11 தரப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் எந்தத் தொழில்நுட்பமும் வைஃபி என்றே அறியப்படுகிறது. டெஸ்க்டாப், லேப்டாப், பாம்டாப் கணிப்பொறிகளை ஒரு லேனில் வயர்லெஸ் முறையில் இணைத்துத் தகவல் பரிமாறிக் கொள்ளுதல், லேப்டாப்/பாம்டாப் மூலம் வயரிணைப்பின்றி இணையத்தை அணுகுதல் இத்தொழில்நுட்பத்தின் உள்ளடங்கிய பயன்களாகும்.
வைஃபி எப்படிச் செயல்படுகிறது?
இருந்த இடத்திலிருந்தே உங்கள் மடிக்கணிப்பொறி மூலமாக இன்டர்நெட் உட்பட ஒரு நெட்ஒர்க்கினை அணுக வேண்டுமெனில் அந்த நெட்ஒர்க்குக்கான வைஃபி மன்டலத்துள் (Wi-Fi Zone) நீங்கள் இருக்க வேண்டும். அலுவலக வளாகம், பெரிய ஓட்டல், ரயில் நிலையம், விமானநிலையம் போன்ற இடங்களில் வைஃபி மண்டலங்களை அமைக்க முடியும். இவை வைஃபி ஹாட்ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. வைஃபி மண்டலத்தில் ஆங்காங்கே அணுகு முனைகள் (Access Points) நிறுவப்பட்டிருக்கும். இவை, தகவல் தாங்கிய அலைக்கற்றையைப் பரப்பவும் வாங்கிக் கொள்ளவும் பயன்படும் டிரான்ஸ்ரிசீவர்களைக் கொண்டிருக்கும். இத்தகைய அக்செஸ் பாயின்டுகள் வயர் மூலமாக அல்லது வயர்லெஸ் முறையில் ஹப்புகள்/சுவிட்சுகளில் இணைக்கப்பட்டிருக்கும். சுவிட்சுகள் அகல்கற்றை இன்டர்நெட் சேவையாளரின் நெட்ஒர்க்கில் (மோடம்/ரூட்டர் வழியே) இணைக்கப்பட்டிருக்கும்.
பயனரின் மடிக்கணிப்பொறி வைஃபி நெட்ஒர்க்குடன் பேசத் தயாரான நிலையில் (Wi-Fi Enabled) இருக்க வேண்டும். கணிப்பொறியை இயக்கியதும் வைஃபி நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டதாகத் தகவல் வரும். வைஃபி நெட்ஒர்க்கின் அனுமதி பெற்ற பயனர் எனில் உடனே நெட்ஒர்க்கில் நுழைந்து விடலாம். அதன்பிறகு இன்டர்நெட்டில் உலா வரலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். அலுவலக வலையகத்தில் நுழையலாம். வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யலாம். அடுத்த விமானப் பயணத்துக்குப் பயணச்சீட்டு பதிவு செய்யலாம்.
வைஃபியின் உட்பிரிவுகள்
செயல்படும் அலைக்கற்றை, தகவல் பரிமாற்ற வேகம், தகவல் பரிமாற்றத் தொலைவு ஆகியவற்றின் அடிப்படையில், ஐஇஇஇ 802.11 தரப்பாடுகளில் நான்கு உட்பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன: 802.11b, 802.11g, 802.11a, 802.11n.
(1) ஐஇஇஇ 802.11b
802.11b பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்பம். ஏற்கனெவே பலநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. பிறவற்றோடு ஒப்பிடும்போது செலவு குறைவானது. ஏற்கனெவே நெரிசலாய் உள்ள 2.4 GHz அலைக்கற்றையில் செயல்படுகிறது. கார்டுலெஸ் தொலைபேசி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்கள் இதன் செயல்பாட்டுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புண்டு. தகவல் பரிமாற்ற வேகம் 11 Mbps வரை இருக்கும். 50 மீட்டர் தொலைவுவரை (பயனர் கணிப்பொறிக்கும் அக்செல் பாயின்டுக்கும் இடையே உள்ள தொலைவு) தகவல் பரிமாற்றம் செய்யலாம். சுவர்களை ஊடுருவிச் செயல்படும் பிற 802.11 நெட்ஒர்க்குகளுடன் ஒத்தியைந்து செயல்படக்கூடியது. விமானநிலையம், ரயில்நிலையம், ஓட்டல்கள், மருத்துவ மனைகள், கல்லூரி/ பல்கலைக்கழக வளாகங்கள், பெரிய நிறுவனங்களில் ஏராளமான வைஃபி ஹாட்ஸ்பாட்டுகள் பெருகி வருகின்றன.
(2) ஐஇஇஇ 802.11g
802.11g சற்றே புதிய தொழில்நுட்பம். வருங்காலத்தில் பெருமளவு வரவேற்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவு செலவு குறைந்தது. 802.11b போன்றே 2.4 GHz அலைக்கற்றையில் செயல்படுகிறது. தகவல் பரிமாற்ற வேகம் 54 Mbps வரை இருக்கும். 50 மீட்டர் வரை செயல்படும். சுவர்களை ஊடுருவிச் செயல்படும் 802.11b ஹாட்ஸ்பாட்டுடன் ஒத்திசைவானது. (அதனுடன் 11 Mbps வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யும்). 802.11a நெட்ஒர்க்குடன் ஒத்திசைவற்றது. 802.11b நெட்ஒர்க்குகள் அனைத்தும் விரைவில் 802.11g நெட்ஒர்க்குகளாக மாற்றப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தகவல் பரிமாற்ற வேகமே இதற்குக் காரணம்.
(3) ஐஇஇஇ 802.11a
802.11a புதிய தொழில்நுட்பம் ஆகும். செலவு அதிகம் பிடிக்கக் கூடியது. நெரிசல் இல்லாத 5 GHz அலைக்கற்றையில் செயல்படுகிறது. 2.4 GHz நெட்ஒர்க்குகளுடன் இடையூறின்றிச் செயல்படும். 802.11b, 802.11g நெட்ஒர்க்குகளுடன் ஒத்தியைந்து செயல்படும். தகவல் பரிமாற்ற வேகம் 54 Mbps. ஆனால் தகவல் பரிமாற்ற து£ரம் பிறவற்றைவிட மிகவும் குறைவு. 25 மீட்டர்கள் வரையே செயல்படும். உள்ளரங்க நெட்ஒர்க்குகளுக்கே ஏற்றது. ஓர் அறையில் பிறவற்றைவிட அதிகப் பயனர்கள் பணியாற்றலாம் என்பதே இதன் சிறப்புக்கூறு. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
(4) ஐஇஇஇ 802.11n
802.11n தொழில்நுட்பம் இன்னும் ஆய்வில் உள்ளது. இதற்கான தரப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. எனினும் இப்போதே பல நிறுவனங்கள் 802.11n சாதனங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன. இப்போதுள்ள வைஃபி தொழில்நுட்பங்களைவிட அதிகத் தகவல் பரிமாற்ற வேகம் கொண்டது. 100 Mbps வரை இருக்கும். 500 Mbps -க்கு மேலும் பெற முடியும். மைமோ (MIMO – Multi Input Output) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஒரே அக்செஸ் பாயின்டில் அதிகமான ஆன்டெனாக்கள் இருக்கும். அதிவேக டேட்டா ஸ்ட்ரீம் ஒன்று பல ஸ்ட்ரீம்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரே சேனலில் வெவ்வேறு ஆன்டெனாக்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். பெறுமுனை ஆன்டெனா ஸ்ட்ரீம்களை ஒன்று சேர்த்து மூலத் தகவலைப் பெறுகின்றது. இதனால் தடுப்புகளினால் குறைவான இடையூறே இருக்கும்.
802.11b மற்றும் 802.11g நெட்ஒர்க்குகளில் இருக்கும் குறைபாடுகள் பல. 802.11g நெட்ஒர்க்குகள் 54 Mbps தகவல் பரிமாற்ற வேகம் தரமுடியும் எனினும் நடைமுறையில் அதில் பாதி வேகம் கூடத் தருவதில்லை. காரணம் சுவர்த்தடுப்புகள், உலோகத் தடுப்புகள், ரேடியோ அலைவரிசை இழப்பு, ஆன்டெனாவின் குறைவான திறன் ஆகியவை. வயர்லெஸ் அக்செஸ் பாயின்டிலிருந்து பயனர் விலகிச் செல்லும்போது பரிமாற்றத் திறன் குறையும். ஒரு அக்செஸ் பாயின்ட் அருகில் நிறையப் பயனர்கள் இருக்கும்போது, அதற்கேற்ப பரிமாற்றத் திறன் குறையும். காரணம் அனைவரும் ஒரே அலைக்கற்றையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 802.11n நெட்ஒர்க்குகளில் இத்தகைய குறைபாடுகள் களையப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் 802.11b மற்றும் 802.11g நெட்ஒர்க்குகள் அனைத்தும் 802.11n நெட்ஒர்க்குகளாக மாற்றப்பட்டுவிடும் என்று கருதப்படுகிறது.
 வைமாக்ஸ் (WiMAX)
'நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயக்க ஒத்தியைபு' எனப் பொருள்படும் Worldwide Interoperability for Microwave Access என்ற தொடரின் சுருக்கச் சொல்லே WiMAX ஆகும். ஐஇஇஇ 802.16 தரப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. வயர்லெஸ் மேன் (Wireless Metropolitan Area Network - WMAN) நெட்ஒர்க்குகளுக்கு வயர்லெஸ் அகல்கற்றை இணைய இணைப்பை வழங்குகிறது.
வைமாக்ஸின் பண்புக்கூறுகள்
வைமாக்ஸ் 50 கி.மீ. தொலைவுவரை செயல்படும். தகவல் பரிமாற்ற வேகம் 1.5 Mbps முதல் 75 Mbps வரை இருக்கும். 10-66 GHz அலைக்கற்றையில் செயல்படும். ஒரு சேனலின் அலைக்கற்றை 1.2 MHz இருக்கும். ஒரு சேனலை ஆயிரக்கணக்கான பயனர்கள் பயன்படுத்த முடியும். வைமாக்ஸில் ஏடீஎம், ஐபீவி4, ஐபீவி6, ஈதர்நெட், வீலேன் (Virtual LAN) போன்ற தகவல் பரிமாற்ற நெறிமுறைகளை (Protocols) பயன்படுத்த முடியும். வைமாக்ஸ், பயனர்களுக்கு அகல்கற்றை இன்டர்நெட் இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, 802.11-இல் அமைந்த வயர்லெஸ் லேன் நெட்ஒர்க்குகள் மற்றும் வைஃபி ஹாட்ஸ்பாட்டுகளுக்குப் பொருத்தமான வயர்லெஸ் பின்புலத் தொழில்நுட்பமாகவும் (Wireless Backhaul Technology) விளங்குகிறது.
வைமாக்ஸ் எப்படிச் செயல்படுகிறது?
வைமாக்ஸ் ஏறத்தாழ செல்லுலர் மொபைல் நெட்ஒர்க் போலவே செயல்டுகிறது. நகரின் பல பகுதிகளில் பெரிய கட்டடங்களின் உச்சியில் வைமாக்ஸ் தள நிலையங்கள் (Base Stations) அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தள நிலையமும் பல கிலோ மீட்டர் பரப்பு வரை சேவை புரியும். அப்பகுதியில் ஆங்காங்கே வீடுகளிலும், அலுவலகங்களிலும், வணிக நிறுவனங்களிலும் அமைந்துள்ள பயனர் நிலையங்களின் தகவல் பரிமாற்றங்களைக் கவனித்துக் கொள்ளும். தள நிலையங்கள் ரூட்டர்கள் வழியே மைய ரூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும். மைய ரூட்டர் இன்டர்நெட் கேட்வேயில் இணைக்கப்பட்டிருக்கும். பயனர் இருப்பிடத்திலுள்ள வயர்லெஸ் சாதனம் நேரடியாகத் தள நிலையத்துடன் தொடர்பு கொள்ளும். அல்லது வயரிணைத்த ஈதர்நெட் லேன் வழியாகவோ அல்லது வைஃபி ஹாட்ஸ்பாட் வழியாகவோ தள நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
வைமாக்ஸின் பயன்பாடுகள்
• வாய்ப் (VoIP – Voice Over IP) எனப்படும் இணையத் தொலைபேசி சாத்தியம். தொலைபேசி நெட்ஒர்க்குகள் வழியே செயல்படும் செல்பேசிக்குப் பதிலாக இணையம் வழியே செயல்படும் ’வாய்ப்’ அல்லது ’வைஃபி’ பேசியினைப் பயன்படுத்தலாம்.
• சிறந்த சேவைத் தரம் சாத்தியம்.
• பிற வயர்லெஸ் தகவல் தொடர்புகளைவிடப் பாதுகாப்பு மிகுந்தது.
• வயரிணைப்பு அகல்கற்றைச் சேவை தரமுடியாத புறநகர்ப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது. குறுகிய கால அவகாசத்தில் வைகமாக்ஸ் சேவையை வழங்க முடியும்.
• செல்லுலர் தள நிலையங்களை இணைப்பதற்கான பின்புல நெட்ஒர்க்காகப் பயன்படுத்த முடியும்.
• வைஃபி ஹாட்ஸ்பாட்டுகளை இணைக்கும் பின்புல நெட்ஒர்க்காகவும் பயன்படும் பின்புல நெட்ஒர்க்குகளுக்குக் செலவு குறைவான மாற்றுவழி இது.
வைமாக்ஸின் உட்பிரிவுகள்
ஐஇஇஇ 802.16 தரப்பாடுகளின் உட்பிரிவுகளாக 802.16a, 802.16d, 802.16e ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. 802.16a, 802.16-இன் விரிவாக்கமே. இது 2GHz-11GHz அலைக்கற்றைத் தகவல் தொடர்புக்கான தரப்பாடாகும். இதுவும் 50 கி.மீ. தொலைவு வரை சேவை வழங்கும். ஒரு தள நிலையம் 6 முதல் 10 கி.மீ. பரப்புவரை செயல்படும்.
802.15d தரப்பாடு,, மேம்பட்ட சேர்த்திணைப்பு (Multiplexing) நுட்பங்களைச் செயல்படுத்த வழிசெய்கிறது. செங்கோண அதிர்வலைப் பகிர்வு சேர்த்திணைப்பு (Orthogonal Frequency Division Multiplexing - OFDM) என்பது அத்தகைய நுட்பங்களுள் ஒன்று.
ஐஇஇஇ வேறு இரண்டு வயர்லெஸ் அகல்கற்றைத் தொழில்நுட்பத் தரப்பாடுகளை உருவாக்குவதற்கான குழுக்களை அமைத்துள்ளது. அவை; (1) 802.16e (2) 802.20. இவை இரண்டும் 'வயரிலா அகல்கற்றைக்கான நடமாடும் காற்றுவழி இடைமுகம்' (Mobile Air Interface for wireless Boradband) என்று அழைக்கப்படுகின்றன. 1 Mbps வரை தகவல் பரிமாற்ற வேகம் கொண்டவை. இந்த இரு தொழில்நுட்பங்களையும் வைமாக்ஸ் என வகைப்படுத்துகின்ற போதிலும் இவற்றை வயர்லெஸ் வேன் (Wireless WAN) தொழில்நுட்பங்கள் எனக்கூறுவது பொருத்தமாகும். 802.16a, 802.16d ஆகியவற்றுக்கும், 802.16e, 802.20 ஆகியவற்றுக்கும் இடையே முக்கிய வேறுபாடு உண்டு:
• 802.16a, 802.16d ஆகியவை நிலையான பயனர்களுக்கு வயர்லெஸ் அகல்கற்றை அணுகலை வழங்குகின்றன.
• 802.16மீ, 802.20 ஆகியவை நடமாடும் பயனர்களுக்கு வயர்லெஸ் அகல்கற்றை இணைப்பை வழங்குகின்றன. இவை செல்பேசித் தொழில்நுட்பத்தைப் போன்று செயல்படுகின்றன.
802.16e, 802.20 ஆகியவை தம்மளவில் எவ்வாறு வேறுபடுகின்றன எனப் பார்ப்போம்:
802.16மீ, பீடிஏ, லேப்டாப்புடன் அங்குமிங்கும் நடந்து செல்லும் பயனர்களுக்கு உரியது. உரிமம் பெற்ற 2-6 GHz அலைக்கற்றையில் செயல்படும். 802.16-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்ட்டது. இதன் தரப்பாடுகள் அங்கீகாரம் பெறும் நிலையில் உள்ளன. இதன் பயன்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளன.
802.20, கார், ரயில் போன்ற வாகனங்களில் வேகமாகப் பயணம் செய்யும் பயனர்களுக்கு உரியது. உரிமம் பெற்ற 3.5 GHz-க்குக் குறைவான அலைக்கற்றையில் செயல்படும். இது முற்றிலும் புதிய தரப்பாடு. இனிமேல்தான் தொடக்கத்திலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். 15 கி.மீ-க்கும் அதிகமான பரப்பில் இது செயல்படும். 250 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனத்தில் இருந்தும் பயன்படுத்தலாம். இப்போதைக்கு 120 முதல் 150 கி.மீ. வரை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
வைமாக்ஸின் வளர்ச்சிப் போக்கு
இன்டெல் நிறுவனம் வைமாக்ஸ் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்பாக உள்ளது. செப்டம்பர் 2004-இல் ரோஸ்டேல் (Rosedale) எனப்பெயர் கொண்ட வைமாக்ஸ் சில்லுத் தொகுதியை (Chipset) உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 2005-இல் வைமாக்ஸ் டிரான்ஸ்மீட்டர்களை உருவாக்குகிறது. 2006-இல் பயனர் கருவிகளை உருவாக்கத் திட்மிட்டுள்ளது. 2006-இல் வைமாக்ஸ் மடிக் கணிப்பொறிகளும் 2007-இல் கையகக் கருவிகளும் தயாரிக்கப்படுமென உறுதியளித்துள்ளது. சீனா, கொரியா நாடுகளில் சில நகரங்களில் வைமாக்ஸ் நெட்ஒர்க்குகளை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் வைமாக்ஸ் பெருமளவு நடைமுறைக்கு வந்துவிடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 எக்ஸ்மாக்ஸ் (xMAX)
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள எக்ஸ்ஜி (xG) என்னும் நிறுவனம், எக்ஸ்மாக்ஸ் (xMAX) என்னும் புதிய அகல்கற்றை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. 'வைமாக்ஸுக்கும் அப்பால்' Beyond WiMAX) என்னும் பொருளை இப்பெயர் உணர்த்துகிறது. ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வைமாக்ஸ் (802.16) வரையறுப்புகளின் ஒரு பகுதியியை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
எக்ஸ்மாக்ஸின் சிறப்புக் கூறுகள்
• ஏற்கெனவே பல வயர்லெஸ் சேவைகள் பயன்படுத்தும் அதே ரேடியோ அலைவரிசையிலேயே பிற சேவைகளைப் பாதிக்காமல் புதிய சேவையை வழங்கும் நவீனத் தொழில்நுட்பமே எக்ஸ்மாக்ஸ். இச்சேவைக்கென தனியான ரேடியோ அலைக்கற்றை தேவையில்லை.
• சாதாரண ஆன்டெனாக்கள் ஈர்த்துக் கொள்ள முடியாத பலவீனமான சிக்னல்களை, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ரேடியோ அலைவரிசையில் எக்ஸ்மாக்ஸ் அலைபரப்பிகள் உமிழும். தனிச்சிறப்பான வடிகட்டிகள் மூலம் அவற்றைப் பிரித்தெடுத்து அதில் பொதிந்துள்ள தகவலைப் பெறமுடியும். ஏற்கெனவே தட்டுப்பாடாய் உள்ள ரேடியோ அலைக்கற்றையில் இரட்டைப் பயன்களைப் பெறக்கூடிய புரட்சிகரமான தொழில்நுட்பம் இது.
• வைமாக்ஸ் 10 GHZ-க்கு மேற்பட் அலைக்கற்றையில் செயல்படுவதால் கட்டடங்களையும் பிற தடுப்புகளையும் ஊடுருவிச் செல்ல இயலாது. மேலும் அதிக தொலைவுக்குப் பயணம் செய்ய இயலாது. எனவே அதிகமான தள நிலையங்கள் தேவைப்படும். ஆனால் எக்ஸ்மாக்ஸ், அடிநிலை அலைக்கற்றையிலேயே (900 MHz) செயல்படுவதால் தடுப்புகளை எளிதாக ஊடுருவிச் செல்லும்.
• எக்ஸ்மேக்ஸ் நவீன பண்பேற்ற (Modulation), குறியாக்க (Encoding) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இத்தொழில்நுட்பங்கள் வழக்கமான குறுங்கற்றை கேரியர் அலைவரிசைகளின் கூறுகளை, குறைமின்சக்தி விரிகற்றையில் காணப்படும் இடையூறு விளைவிக்காத தகவல் பரிமாற்றக் கூறுகளுடன் ஒருங்கிணைக்கிறது. இதனால் பிற அகல்கற்றைத் தொழில்நுட்பங்களை விட அதிகமான டேட்டா பரிமாற்றத் திறனை வழங்குகிறது. விரிகற்றைச் சிக்னல்களில் தகவல்கள் அனுப்பப்படும். பெறுமுனையில் அவற்றை ஒருங்கிணைக்க, குறுங்கற்றை சிக்னல்களப் பயன்படுத்திக் கொள்ளும்.
• காற்று மண்டலத்தில் காணப்படும். நிலை இரைச்சலுக்கும் (Static Noise) கீழான மின்சக்தி நிலையில் விரிகற்றை டேட்டா அலைபரப்பப்படுவதால் பிற நெட்ஒர்க்குகளுக்கு இடையூறாக இருக்காது. ரேடியோ அலைவாங்கிகள் இரைச்சல் நிலைக்கு மேல்உள்ள சிக்னல்களை மட்டுமே சேகரிக்கும் பண்புள்ளவை.
• வேரிபேண்டு (Variband) என்னும் புதிய நுட்பத்தை எக்ஸ்மாக்ஸ் பயன்படுத்துகிறது. இயங்குநிலையில் தல நிலைமைகளுக்கு ஏற்ப டேட்டா பரிமாற்ற வீதத்தைத் தகவமைத்துக் கொள்ளும். பிற அகல்கற்றைத் தொழில்நுட்பங்களோடு ஒப்பிடுகையில் இரைச்சல் சூழலில் எக்ஸ்மாக்ஸின் டேட்டா பரிமாற்ற வீதம் பாதிக்கப்பவதில்லை எனப் பரிசோதனைகள் காட்டியுள்ளன.
• எக்ஸ்மேக்ஸ் மிகக்குறைந்த மின்சக்தி அலைபரப்பிகளையே பயன்படுத்துகிறது. எனவே பேட்டரி பயன்-நாள் அதிகமாக இருக்கும். இயல்பாகவே மிக எனிய நெட்ஒர்க் என்பதால், எக்ஸ்மாக்ஸ் சிக்கனமான அகல்கற்றைத் தீர்வாக இருக்கும். ஒரு நகர் முழுமைக்கும் ஒற்றைத் தள நிலையம் போதும். நகரிலுள்ள அனைத்து ஹாட்ஸ்பாட்டுகளையும் ஒருங்கிணைக்கும் வல்லமையை அது பெற்றிருக்கும்.
• சாதாரண வயரிணைப்பு டிஎஸ்எல் இணைப்பைக் காட்டிலும் அதிக தொலைவுக்கு (21.6 கி.மீ) தகவல் பரிமாற்றம் சாத்தியம்.
எக்ஸ்மாக்ஸ் பயன்பாடுகள்
எக்ஸ்மாக்ஸின் பயன்பாடுகள் பல. தொடக்கத்தில் சிறநத் சேவைக்கு உயர்ந்த விலைதரத் தயாராக இருக்கும் பயனர்களுக்கான அதிவேகச் சேவைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பரவலாகச் செயல்பாட்டுக்கு வரும் காலத்தில் ஏராளமான சேவைகளை வழங்கும். அவற்றுள் சில:
• அகல்கற்றை இணைய இணைப்பு
• 3G-க்கு அப்பால் அகல்கற்றைச் செல்பேசிகள்
• மிக அதிவேக புளூடூத் சேவை
• வீடியோ - ஆன் - டிமாண்டு சேவை
• வயர்லெஸ் லேன், வயர்லெஸ் ஏடீஎம் (622 Mbps)
• செயற்கைக்கோள் தொலைபேசி/தொலைக்காட்சி/வானொலி
• வாகன ஓட்டம், கண்காணிப்பு, போக்குவரத்து மேலாண்மை
• வீட்டுப் பயன்பாட்டுக்கென வயர்லெஸ் சாதனங்கள்
• பொதுப் பாதுகாப்பு (போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ்)
• வயரிலா/வயரிணைப்பு ஹெச்டிடீவி
• வயரிலா/வயரிணைப்பு கேபிள்டீவி
எக்ஸ்மாக்ஸில் பெறப்படும் பலன்கள்
• விலைகுறைந்த வீட்டு நுகர்வு சாதனங்கள் முதல், அதிநுட்பம் வாய்ந்த விலையுயர்ந்த வணிக சாதனங்கள் வரை சந்தைக்கு வரும்.
• உயர் தொழில்நுட்பச் சேவைகளை நடைமுறைப் படுத்துவதில் நேருக்கு நேரான அலைபரப்புக் (Line-of-Sight) கட்டுப்பாட்டு வரம்புகள், விலை அதிகமான பயனர் கருவிகள், நிறுவுகைச் செலவுகள் ஆகியவை தற்போதைய தொழில்நுட்பங்களில் உள்ள முக்கிய இடர்ப்பாடுகள் ஆகும். வைமாக்ஸில் இத்தகைய இடர்ப்பாடுகளுக்கு இடமில்லை.
• ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கேபிள் ரேடியோ அலைவரிசைச் சேனல்களில் இப்போது தரப்பட்டுவரும் சேவைகளுடன் சேர்த்து அவற்றுக்கு இடையூறின்றிப் புதிய சேவைகளை வழங்க முடியும். இருக்கின்ற நெட்ஒர்க் ஊடகங்கள் வழியாக எக்ஸ்மாக்ஸ் செயல்படும். இறுதி முனைகளில் மட்டுமே புதிய கருவிகளைப் பொருத்த வேண்டும். எனவே புதிய சேவைகளை எளிதில் விரைவில் சேர்த்துக் கொள்ள முடியும்.
• வாகனப் போக்குவரத்துச் சேவையாளர்கள் தம்முடைய வாகனங்களில் எக்ஸ்மேக்ஸ் சாதனங்களைப் பொருத்திக் கொண்டால், எந்த வாகனம் எங்குள்ளது என்பதை எந்த நேரத்திலும் கண்காணிக்க முடியும். இதே பலனை போலீஸ், தீயணைப்பு மருத்துவத் துறையினரும் (ஆம்புலன்ஸ்) பெற முடியும்.
*****

No comments:

Post a Comment