Powered By Blogger

Monday, October 31, 2011


ரயில்கள் மோதலை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு: அரக்கோணத்தில் சோதனை 
  அரக்கோணம், செப்.2 (டிஎன்எஸ்) ரயில்கள் மோதல் விபத்துக்கள் கடந்த சில மாதங்களாக வட இந்தியாவில் அதிகளவில் நடந்தன. உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிகளவில் ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க கொங்கன் ரயில்வே ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கெர்னக்ஸ் மைக்ரோ சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே புதிய கருவியை கண்டு பிடித்துள்ளனர்.

தற்போது டீசல் என்ஜின்களில் கொங்கன் ரயில்வேயில் அறிமுகப்படுத் தப்பட்டு வெற்றி பெற்றுள்ள இந்த கருவியை இந்தியாவிலேயே முதன் முறையாக மின் என்ஜினில் பொருத்தும் நிகழ்ச்சி தெற்கு ரயில்வேயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

கொங்கன் ரயில்வே நிர்வாக இயக்குநர் பி.பி. தாயில் கருவியை இயக்கி தொடங்கி வைத்தார்.

ரயில்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்க செயற்கைக் கோள் உதவியுடன் செயல்படும் இக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியப் பொருள் களைக் கொண்டு இந்தியர்களின் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இது போன்ற கருவிகள் இருந்தாலும் தற்போது இதில் இருக்கும் செயல்பாடுகள், வசதிகள் வேறு எங்கும் இல்லை. இது உலகிலேயே முதன் முறையாக இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்டுள்ளது.

மோதலை தவிர்க்கும் இக்கருவி தானியங்கி பிரேக் சிஸ்டம், தானியங்கி பாதுகாப்பு என இரு பிரிவுகளாக இயங்குகிறது. செயற்கைக்கோள் உதவியுடன் எந்த என்ஜினில் இது பொருத்தப்பட்டுள்ளதோ அதன் முன்னும் பின்னும் 3 கி.மீ தூரத்திற்கு இக்கருவியின் கண் காணிப்பு இருக்கும். வழியில் எதிரில் ரெயில்கள் சென்றாலோ அதே இருப்புப்பாதையில் எதிரில் ரெயில்கள் வந்தாலோ, செல்லும் பாதையில் ரெயில்வே கேட்டுகள்திறந்து இருந்தாலோ இது ரெயில் என்ஜினின் டிரைவருக்கு சமிக்ஜைகளை அனுப்பும்.

மேலும் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பாகவே என்ஜினின் வேகத்தை தானே குறைத்து ரெயிலை நிறுத்திவிடும். இக்கருவிகள் 15 வகையான விபத்த உருவாகும் சூழ்நிலைகளை முன்னரே கண்டறியும்.

தற்போது சோதனை முயற்சியாக அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் அரக்கோணம் பட்டாபிராம் ரெயில் நிலையங்களுக்கு இடையே செயற்கைக்கோள் கண்காணிப்பில் இக்கருவி இயங்க உள்ளது.

முதல் முறையாக ஆறு மின் என்ஜின்களில் இது பொருத்தப்பட்டு, இது செயல்படுவதைப் பொருத்து படிப்படியாக இந்தியன் ரெயில் வேயின் அனைத்து மின் என்ஜின்களிலும் இது பொருத்தப்படும் என்று கொங்கன் ரயில்வே நிர்வாக இயக்குநர் பி.பி. தாயில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.